தஞ்சாவூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச பாடப்புத்தகங்கள்

தஞ்சாவூர், ஜூன் 14: தஞ்சை கீழராஜ வீதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு எம்எல்ஏ., நீலமேகம் அரசின் இலவச பாடப் புத்தகங்களை வழங்கினார். தஞ்சை மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து 1 மாதத்திற்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. தஞ்சை கீழராஜ வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது. இப்பள்ளி மாணவிகளுக்கு எம்எல்ஏ., நீலமேகம் அரசின் இலவச பாடப் புத்தகங்களை நேற்று வழங்கினார். எந்த வகுப்பு படிக்கிறீர்கள்? எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் போன்ற பல்வேறு விவரங்களை மாணவிகளிடம் கேட்டறிந்தார். நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று மாணவிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை சித்ரா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி, மாநகர துணை செயலாளர் சிந்தனைச்செல்வம், கவுன்சிலர்கள் அய்யப்பன், அன்னபிரகாஷ் மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ரா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழக முதல்வர் நடவடிக்கையால் அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். பல பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை முதல்வர் அறிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது என்றார்.

தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகே மாநகராட்சி பள்ளி மாணவர்களை மேயர் சண்.ராமநாதன் வரவேற்று இனிப்பு, அரசின் இலவச பள்ளி பாட புத்தகங்களை வழங்கி நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

தமிழகத்தில் நேற்று கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதை முன்னிட்டு நேற்று காலை தஞ்சை பழைய பஸ் நிலையத்துக்கு சென்ற மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பஸ்சில் இருந்து இறங்கிய மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு, பூங்கொத்து கொடுத்து வரவேற்று பள்ளிக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தஞ்சை மாநகராட்சி பள்ளிக்கு சென்று மாணவர்களை வரவேற்று இனிப்பு வழங்கினார். பின்னர் அரசின் இலவச பள்ளி பாட புத்தகங்களை வழங்கி நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும் சொந்த செலவில் எழுது பொருட்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

Related Stories: