நாகையில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமா?

நாகை,ஜூன் 14: நாகையில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக பிரதானமாக மீன்பிடித் தொழில் உள்ளது. சுனாமியின்போது பேரழிவை சந்தித்த நாகை பகுதி தற்போது தான் மெல்ல வளர்ச்சியை நோக்கி திரும்பி வருகிறது. மீன்பிடி கிராமங்களில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க முதல் கட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. வர்த்தகமும், வேலை வாய்ப்புகளும் பெருகி வருகிறது.

நாகை மாவட்டத்தில் நாகூர் ஆண்டர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர், நீலாயதாட்சியம்மன்கோயில், நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் போன்ற பிரசித்திப்பெற்ற ஆன்மீக தலங்களும் அமைந்துள்ளது. கோடியக்கரை, கோடியக்காடு, கலங்கரை விளக்கம் போன்ற சுற்றுலா தலங்களும் உள்ளது. இதனால் வாகன போக்குவரத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாகை மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் பல்வேறு நிலைகளில் தொழில் உள்ளிட்டவைகள் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் போக்குவரத்துக்கு சாலை மற்றும் பேருந்து நிலையங்கள் போதிய அளவில் இல்லாதது நாகை பகுதி மக்களை கவலையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: நாகை மாவட்டத்திற்கு தென்மாவட்டங்கள் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வர்த்தகர்கள், சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்துசெல்கிறார்கள். தற்போது உள்ள பேருந்து நிலையம் மிகவும் பழமையாகவும், போதிய இடவசதிகள் இன்றி உள்ளது. மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து பெருக்கத்திற்கு ஏற்ப பேருந்து நிலையங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

இதற்கு மாற்றாக நாகையில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும். தற்போது உள்ள பேருந்து நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையே உள்ளது. எனவே நாகையில் ஒருங்கிணைந்த மத்திய பேருந்து நிலையத்தை அமைக்க மாவட்ட நிர்வாகத்துடன், நகராட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மத்திய பேருந்து நிலையம் அமைந்தால் கடைத்தெரு, புதிய பேருந்து நிலையம் பகுதிகள் வளர்ச்சி குறையும் என்று சிலர் கருதி வருகிறார்கள். முக்கியமாக மத்திய பேருந்து நிலையம் அமையும் பட்சத்தில் நாகையின் இருபுறமும் வளர்ச்சி காணும். எனவே இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். புதிதாக அமையும் ஒருங்கிணைந்த மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தற்பொழுது உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு இரவு, பகலாக பஸ்கள் இயக்கப்பட வேண்டும். அவ்வாறு இயக்கப்பட்டால் நகர பகுதியில் எவ்விதமான தொழில்களும் பாதிப்பு அடையாது என தெரிவிக்கின்றனர்.

Related Stories: