பொதுமக்கள் எதிர்பார்ப்பு மக்கள் குறைதீர் கூட்டத்தில் திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை

நாகை, ஜூன் 14: நாகையில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டையை கலெக்டர் அருண்தம்பு ராஜ் வழங்கினார். நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது. குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 180 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து வேதாரண்யம் வட்டத்தை சேர்ந்த ராசியம்மாள் என்பவர் பாம்பு கடித்து இறந்தமைக்கு அவரின் குடும்பத்திற்கு முதல்வரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும், நாகூரை சேர்ந்த அப்துல்காதர் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையையும், திருக்குவளை வட்டம் நீர்மூளை ஓடாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சித்ராவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையையும், கீழ்வேளுர் வட்டம், பிரதாபராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசித்ராவிற்கு கலெக்டரின் தன் விருப்ப நிதியிலிருந்து தையல் இயந்திரத்தையும் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் இரண்டு திருநங்கைகளுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டையினையும் இரண்டு திருநங்கைகளுக்கு அடையாள அட்டையினையும் கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் டிஆர்ஒ ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் ராஜன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: