அச்சத்தை போக்கும் வகையில் அரசு பள்ளியில் 1ம் வகுப்பில் சேரும் புதிய மாணவர்களுக்கு நூதன வரவேற்பு

கூடலூர், ஜூன்14: முதல்முறையாக பள்ளிக்கு வரும் பழங்குடியின குழந்தைகளின் அச்சத்தை போக்குவிதமாக அங்கு ஏற்கனவே பயிலும் மாணவர்கள் நூதன முறையில் நேற்று வரவேற்பு அளித்தனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது பெண்ணை அரசு ஆரம்ப பள்ளி. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தப்படுகிறது. இங்கு 24 மாணவர்கள் படிக்கிறார்கள். முழுக்க முழுக்க  பழங்குடியின மாணவர்களுக்காக மட்டுமே இந்த பள்ளி செயல்படுகிறது. இந்த பகுதி பெற்றோர் தங்களது குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்த்திருந்தனர். 1 மாத கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டனர். முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட குழந்தைகளையும் பெற்றோர் பள்ளிக்கு அழைத்து வந்தனர். அப்போது அங்கிருந்த மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் பறவை, விலங்கு முகமூடி அணிந்தும் அவைகள் எழுப்பும் சத்தம்போல் ஒலி எழுப்பியும் வரவேற்றனர். இது தவிர ஆலமரம், மீன் உள்ளிட்ட ஓவியங்களில் தமிழ் எழுத்துக்கள் எழுதப்பட்டும் வரவேற்றனர். புதிய மாணவர்கள் அச்சமின்றி புன்னகையுடன் வகுப்புக்கு சென்றனர். இந்த நூதன வரவேற்பு இந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் முருகேசன், ஊர்த்தலைவர் அப்பு, கிராம கல்வி மேலாண்மை குழு தலைவர் மீனா உள்ளிட்டோர் செய்தனர்.

Related Stories: