ஆவடி, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆவடி: ஆவடி, பள்ளிப்பட்டு பகுதிகளில் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக யாககுண்டங்கள் அமைத்து பூஜைகள் நடைபெற்றது. பின்பு நேற்று விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், நான்காம் யாகசாலை பூஜை, மூலிகை பொருட்கள் கொண்டு விசேஷ திரவியங்களால் பூஜை செய்யப்பட்டது. பின்பு ஆலயத்தின்மேல் வைக்கப்பட்ட கலசங்களுக்கு, சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழுங்க புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் கருவறையில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு பாலபிஷேகம், நெய்யபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை நடந்தது.ஆலயத்தில் திரண்டிருந்த பக்தர்களுக்கு புனிதநீர் தெளித்தனர். சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கொண்டார். ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், அம்பத்தூர்,  பூந்தமல்லி,  திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். ஆலயத்துக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆவடி மேயர் ஜி.உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், நகர பொறுப்பாளர் ராஜேந்திரன், பேபி.சேகர் ஜி.நாராயண பிரசாத் பொன்.விஜயன், சி.செல்வம், செயலாளர் எம்.கார்த்திகேயன், கும்பாபிஷேக விழா கமிட்டி தலைவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி, செயலாளர் எம்.டி.சண்முகசுந்தரம், பொருளாளர் எஸ்.விஜயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம்  கிராமத்தில்  ஸ்ரீசெல்லாத்தம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி திருக்கோயில் வளாகத்தில் யாகசலைகள் அமைக்கப்பட்டு  நித்திய ஹோம குண்ட பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று காலையில் மஹா பூர்ணாஹூதியை தொடர்ந்து  மேள தாளங்கள் முழங்க  கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர்,  விமான கோபுரத்திற்கு புனித நீரால் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருக்கோயில் சுற்றி கூடியிருந்த பக்தர்கள் மீது  தீர்த்த நீர் தெளிக்கப்பட்டது. இதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இந்த மஹா கும்பாபிஷேக விழாவில்,  திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.பூபதி, ஒன்றிய செயலாளர்கள் பி.பழனி, சி.என்.சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் உமாபதி உள்பட பலர்  கலந்துகொண்டனர்.  ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி ப.க.சேகர் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் எம்.பி திருத்தணி கோ.அரி  தொடங்கிவைத்தார். ஆர்.கே.பேட்டை ஒன்றிய செயலாளர், மாவட்ட கவுன்சிலர்  நாகபூண்டி கோ.குமார், ஒன்றிய துணை செயலாளர் அசோக் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல், அத்திமாஞ்சேரியில்  நூகாலம்மனுக்கு புதிய கோயில் கட்டப்பட்டு புதன் முதல்  மூன்று நாட்கள் கும்பாபிஷேக விழா  வெகு விமர்சையாக  நடந்தது. விழாவையொட்டி  ஆலயம் மற்றும் கிராம வீதிகள் வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  

ஆலய வளாகத்தில் ஹோம குண்ட பூஜைகளை  தொடந்து மஹா பூர்ணாஹூதி செய்யப்பட்டு  மேள தாளங்கள் முழங்க  புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர்  விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர்,  தீர்த்த நீர்  கோயில் முன் கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து,  நூகாலம்மனுக்கு அபிஷேக பூஜைகள் தொடர்ந்து அம்மனை பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். கும்பாபிஷேக விழாவில்  எஸ்.சந்திரன் எம்எல்ஏ, மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.பூபதி, பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா, கிளை செயலாளர் சி.ஆர்.பட்டடை  வெங்கடேசன், அதிமுக ஒன்றிய செயலாளர் டி.டி.சீனிவாசன்,  உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருக்கோயில்  நிர்வாக குழு தலைவர் ராஜேந்திரபாபு, ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ஜெயபிரகாஷ் உள்பட கிராம மக்கள் மஹா கும்பாபிஷேகம் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: