நொச்சிலி ஊராட்சியில் 8 மாதங்களாக மூடியே கிடக்கும் நூலக கட்டிடம்: சீரமைக்க கோரிக்கை

பள்ளிப்பட்டு: நொச்சிலி ஊராட்சியில் பழுதடைந்து உடைந்து விழும் அபாயத்தால் 8 மாதங்களாக திறக்கப்படாத ஊர்புற நூலகத்தை  மாற்று இடத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பள்ளிப்பட்டு ஒன்றியம் நொச்சிலி  ஊராட்சி  தொட்டி காலனியில் ஊர்புற நூலகம் செயல்பட்டு வந்தது. இதனை அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பயன்படுத்தி வந்தனர். நூலக கட்டிடத்திற்கு  பக்கத்தில்  அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்ததால் பழுதடைந்து உடைந்து விழும் அபாய நிலையில் இருந்த  ஊர்புற நூலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால், தினசரி நாளிதழ்கள் படிக்க முடியாமலும் வார இதழ்கள்,  புத்தகங்கள் வாசிக்க முடியாததாலும், படித்த இளைஞர்கள் போட்டி தேர்வுக்கு தயாராவதற்கு எளிதாக புத்தகங்களிலிருந்து குறிப்பு எடுத்து படிக்க முடியாத நிலையில் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கூறுகையில், `ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில்  ஊர்புற நூலகம் செயல்படுத்தப்பட்டு வந்தது.  கட்டிடம் பலவீனமடைந்து உடைந்து விழும் நிலையில்  மூடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சிட்டியம்மாவிடம் கோரிக்கை வைத்தும் கண்டுக்கொள்ளவில்லை.  கடந்த 8 மாதங்களாக  தினசரி நாளிதழ்கள் கூட வரவைப்பதில்லை. இதனால், கிராமத்தில் படித்த இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு  வாசிப்பு பயிற்சி குறைந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு மாற்று இடத்தில் நூலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்’  என்றார்.

Related Stories: