முத்துப்பேட்டை அருகே 23 செம்மறி ஆடுகள் திருட்டு

முத்துப்பேட்டை, ஜூன் 11: முத்துப்பேட்டை அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 23 செம்மறி ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி கிராமத்தில் அப்பகுதி விவசாயி அழகேசன் என்பவரின் வயலில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ரங்கசாமி மகன் கேசவன் (66) என்பவருக்கு சொந்தமான செம்மறி ஆடு பட்டிகள் பல உள்ளது. நெல் சாகுபடிக்கு இங்கிருந்து கிடைக்கும் மாட்டு சாணம், ஆட்டு எரு, இலைகள் போன்ற இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆடுகள் அடைக்கும் பட்டியில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ராசி (44) என்பவரும், தென்னடார் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (40) என்பவரும் சம்பவத்தன்று இரவு 350 ஆடுகளைக் கொண்ட ஆட்டுப்பட்டியை வலை வைத்து அடைத்துவிட்டு வயலில் தூங்கியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ இரவோடு இரவாக 23 செம்மறி ஆடுகளை திருடிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆடு பட்டியின் உரிமையாளர் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த கேசவன் எடையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் ஆடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: