ஊழியர்களுக்கு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளதா? கடைகள், நிறுவனங்களில் மேயர் ஆய்வு

நெல்லை, ஜூன் 11: டவுன் பகுதியில் உள்ள கடைகள், நிறுவனங்களில் ஊழியர்களுக்கு உரிய இருக்கை வசதி செய்யப்பட்டு உள்ளதா? என மேயர் பி.எம்.சரவணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கையில் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவுதல் சட்டம் 1947ல் பிரிவு 22 (அ)படி தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு  பணிநேரத்தில் அமர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்தும் விதமாகவும், பணி நேரம் முழுவதும் நின்று கொண்டே இருக்க வேண்டிய நிலையை தவிர்க்கும் பொருட்டும் அனைத்து நிறுவன வளாகங்களிலும் இருக்கை வசதி  செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய  இருக்கை வசதி செய்யப்பட்டு உள்ளதா? என மேயர் பி.எம்.சரவணன், நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறுகையில், முதல்வர் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில், ‘தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பணிநேரம் முழுவதும் நின்று கொண்டே பணிபுரியும் சிரமத்தை போக்கும் விதமாக பணிநேரத்தில் அமர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்தும் விதமாக பணியாளர்கள் நலன்கருதி அவர்களுக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்று  கூறியது சட்டமசோதாவாக அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து டவுன் பகுதியை சுற்றியுள்ள நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தேன், என்றார்.

Related Stories: