கோயில் கும்பாபிஷேக விழாவில் 3 மூதாட்டிகளிடம் 15 பவுன் நகை பறிப்பு

காடையாம்பட்டி, ஜூன் 11: காடையாம்பட்டி அருகே, கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட 3 மூதாட்டிகளிடம், 15 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காடையாம்பட்டி அடுத்த குண்டுக்கல் ஜோடுகுளி பகுதியில், சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் கூட்டத்தை பயன்படுத்தி மர்ம கும்பல், 3 மூதாட்டிகள் கழுத்தில் அணிந்து இருந்த நகைகளை பறித்துச்சென்றனர். சேலத்தை சேர்ந்த சின்னம்மாள்(65) என்பவரிடம் 6 பவுன் செயினும், ஜோடுகுளியை சேர்ந்த சித்தாகி(60) என்பவர் கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் செயின் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மயிலியம்மாள்(62) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் சங்கிலி என மொத்தம் 15 பவுன் நகைகளை பறித்து சென்றனர்.

இதுகுறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அருகில் பாதுகாப்புக்கு பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகளை பெற்று ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று முன்தினம், வாழப்பாடி அடுத்த புதுப்பாளையத்தில் நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி கும்பல், 2 மூதாட்டிகள் உள்பட 3 பேரிடம் 11 பவுன் நகைகளை பறித்துச்சென்றனர். இதன் தொடர்ச்சியாக, காடையாம்பட்டி அருகே கும்பாபிஷேக விழாவில் 15 பவுன் நகைகளை கும்பல் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: