அரசுப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு

சேலம், ஜூன் 11: சேலத்தில் உள்ள அரசு பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். சேலம் மாவட்டத்தில் 1,110 தொடக்கப் பள்ளிகள், 366  நடுநிலைப் பள்ளிகள், 136 உயர்நிலைப் பள்ளிகள், 159 மேல்நிலைப்  பள்ளிகள் என மொத்தம் 1,771 அரசுப் பள்ளிகளும், 123 அரசு நிதியுதவி பெறும்  பள்ளிகள், 504 தனியார் சுயநிதிப் பள்ளிகள் என ஒட்டுமொத்தமாக 2,398 அரசு  மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கோடை விடுமுறை முடிந்து வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தூய்மை பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மணக்காடு காமராஜ் நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்து வரும் தூய்மைப் பணிகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது: தமிழக அரசு தலைமைச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்க இருப்பதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு, பள்ளிகளை அழகு மிகுந்த இடமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தூய்மையான இடத்தில்தான் பயிலும் ஆர்வம் அதிகரிக்கும் என்பதால், ஒரு வாரம் முழுவதும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளையும் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் வகுப்பறைகள், குடிநீர் தொட்டிகள், கழிவறைகள், பள்ளி வளாகம் மற்றும் விடுதி வளாகம் ஆகியவை சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் தொட்டிகள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு குளோரினேசன் செய்திடவும், பள்ளிகளின் அறையில் ஏதேனும் பழுதுகள் இருந்தால் அதனை அகற்றி, கரும்பலகைகளைச் செப்பனிட்டு, அழுக்குகளை சீர்செய்து புதிய அறையைப் போல மெருகேற்றவும், பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.

Related Stories: