3 திருமணம் செய்ததை மறைத்து இளம்பெண்ணுக்கு லவ் டார்ச்சர் கொடுத்த காதல் மன்னன் கைது: கார், கஞ்சா பறிமுதல்

சென்னை: கொடுங்கையூர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையை சேர்ந்தவர் நூரி (18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரது குடும்ப நண்பரான தண்டையார்பேட்டை வினோபா நகரை சேர்ந்த ரசூல் கான் (38), அடிக்கடி நூரி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், ஒருநாள் ரசூல் கான் நூரியை காதலிப்பதாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த நூரி இதுகுறித்து தனது தாயாரிடம் கூறி உள்ளார். அவர், ரசூல்கானை கண்டித்துள்ளர்.

ஆனாலும், ரசூல்கான் தொடர்ந்து நூரிக்கு தொல்லை கொடுத்ததுடன், தன்னை திருமணம் செய்யும்படி மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் நூரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ரசூல்கான் மீது எம்கேபி நகர், கொடுங்கையூர், மணலி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அவர் ஏற்கனவே 3 முறை திருமணமாகி, 3 மனைவிகளும் அவரை விட்டு விட்டு சென்றதும் தெரியவந்தது.

தலைமறைவான அவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று கொடுங்கையூர் மூலக்கடை சந்திப்பு அருகே ஒரு சொகுசு காரை போலீசார் மடக்கி சோதனை செய்தபோது, அதில் ரசூல் கான் மற்றும் அவரது நண்பரான பிரபல கஞ்சா வியாபாரி செங்குன்றத்தை சேர்ந்த கார்த்திக் (23) என்பவருடன் செல்வது தெரிந்தது. காரை சோதனை செய்தபோது அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்தனர். கார்த்திக் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்த போலீசார், ரசூல் கான் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். இந்த ரசூல் கானை 2020ம் ஆண்டு எம்கேபி நகர் பகுதியில் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் போலீசார் பிடிக்க முற்பட்டபோது எம்கேபி நகர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து கை, கால் உடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: