சிறுமி படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்தவருக்கு வலை

சென்னை: சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் மாலா (45, பெயர் மாற்றப்பட்டள்ளது). இவரது மகள் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி, கடந்த மே மாதம் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள தனது தாத்தா வீட்டிற்கு கோடை விடுமுறைக்காக சென்றபோது, சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த மது கிரண் என்பவர், சிறுமியிடம் நட்பாக பழகி, செல்போன் எண்ணை வாங்கியுள்ளார். பின்னர், வாட்ஸ் அப் மூலம் சிறுமியிடம் பேசி வந்ததுடன், அவளது புகைப்படங்களையும் பெற்றுள்ளார். இதுபற்றி சிறுமியின் வீட்டிற்கு தெரிய வந்ததால், சிறுமியை கண்டித்துள்ளனர்.

இதனால் சிறுமி மது கிரணுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். ஆனால், சிறுமியை தொடர்பு கொண்ட மதுகிரண், தொடர்ந்து என்னிடம் பேசவில்லை என்றால், உனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன், என மிரட்டி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி, இதுபற்றி தனது தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ஓட்டேரி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த வழக்கை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: