மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் தீவிர தூய்மைப்பணி விழிப்புணர்வு முகாம்: இன்று நடைபெறுகிறது

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை படி, சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்த “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 2022-2023 ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவித்தார்.

அதன்படி, ஜூன் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமையான இன்று “பெருமளவில் மக்கள் பங்களிப்புடன் பொது இடங்களை சுத்தம் செய்தல்” என்ற தலைப்பின் கீழ் மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. தேனாம்பேட்டை மண்டலம், லூப் சாலையில் நடைபெறும் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் மேயர் பிரியா பங்கேற்க உள்ளார்.

பேருந்து நிலைங்கள், பூங்காக்கள், வழிபாட்டுத் தலங்களின் வெளிப்புறம், ரயில் நிலையங்களின் வெளிப்புறம், சுற்றுலாத் தளங்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகள், குடிசைப் பகுதிகள் மற்றும் தகனமேடையின் சுற்றுப்புறம் போன்ற பகுதிகளில் தீவிர தூய்மைப் பணிகள் நடைபெற உள்ளது.

இதில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு தொடங்கிடவும், பொதுமக்களுக்கு குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மைக்கான உறுதி மொழியினை ஏற்கவும், தூய்மைப் பணிகளுக்கு தேவையான பேட்டரியால் இயங்கும் வாகனங்கள், இலகுரக வாகனங்கள் , கனரக வாகனங்கள், ஜே.சி.பி. போன்ற அனைத்து இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி தீவிர தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் குப்பைகளை சேகரிக்க துணிப்பை அல்லது மக்கும் தன்மையுள்ள சாக்குப்பை போன்றவற்றை பயன்படுத்திடவும், பொது இடங்களில் உள்ள சுவர்களில் உள்ள அனைத்து விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றி அவற்றில் கலைநயமிக்க வண்ண ஓவியங்கள் வரைந்திடவும், அரசு அலுவலகங்களில் உள்ள சுவர்களில் அலுவலக அனுமதியுடன் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடர்பான விளக்கப்படங்களை வரையவும், “எனது குப்பை, எனது பொறுப்பு” என்ற வாசகத்தினை விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு பெரியளவில் பிரபலப்படுத்திடவும், சாலையோரங்களில் உள்ள அனைத்து கட்டிடக் கழிவுகளையும் அப்புறப்படுத்திடவும், குடியிருப்பு பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்களில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றிடவும், சமுதாய கழிப்பறை மற்றும் பொதுக் கழிப்பறைகளை தூய்மைப்படுத்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தீவிர தூய்மைப் பணி இயக்கமானது மக்கும், மக்காத குப்பையை முறையாக பிரித்து வழங்குவது பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான மாற்றத்தை பெருமளவில் பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது, என மாநகராட்சி  தெரிவித்துள்ளது.

Related Stories: