நெல்லை மாநகராட்சியில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமைக்கு மீண்டும் மாற்றம்

நெல்லை, ஜூன் 9: நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமைக்கு மீண்டும் மாற்றப்படுகிறது.நெல்லை மாநகராட்சியின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், பல்லாண்டுகளாக செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வந்தது. இதில் மாநகர பகுதிகளிலிருந்து மக்கள் திரண்டு வந்து தங்கள் அடிப்படை தேவைகள் குறித்து மேயரிடம் மனு அளித்து வந்தனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 5 ஆண்டுகளில் கூட செவ்வாய்க்கிழமை தோறும், பொதுமக்கள் மனுக்களோடு வந்து ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளித்து வந்தனர். இதனிடையே சமீபத்தில் நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமையில் இருந்து புதன்கிழமைக்கு மாற்றப்பட்டது. ஆனால் மக்கள் மத்தியில் அதற்கு போதிய வரவேற்பு இல்லை. கடந்த 3 வாரங்களாக குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை நடத்தப்பட்ட நிலையில் குறைவான மனுக்களே வந்தன. மேலும் புதன்கிழமை சுப தினம் என்பதால், திருமணம், சடங்கு உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் செல்வதால் குறைதீர்க்கும் நாளில் கூட்டம் குறைந்தது. எனவே நெல்லை மாநகராட்சி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை அடுத்த வாரம் முதல் மீண்டும் செவ்வாய்க்கிழமை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நெல்லை மாநகராட்சியில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நேற்று நடந்த  மக்கள் குறை தீர் நாள் கூட்டத்திற்கு தலைமை வகித்த மேயர் பி.எம். சரவணன், மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டதோடு இவற்றின் மீது பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: