மக்களின் சிரமத்தை போக்க தொண்டியை தாலுகாவாக அறிவிக்க கோரிக்கை

தொண்டி, ஜூன் 9:  தொண்டியை மையமாக வைத்து ஏராளமான கிராமப்புறங்கள் உள்ளது. அரசின் அனைத்து தேவைக்கும் பல கிலோ மீட்டர் உள்ள திருவாடானைக்கு செல்ல வேண்டியுள்ளது. அதனால் தொண்டியை தனி தாலுகாவாக அறிவிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் நகர் பகுதியாகும். தொண்டியை சுற்றிலும் ஏராளமான கிராம பகுதிகள் உள்ளது. காரங்காடு, முள்ளிமுனை உட்பட எஸ்.பி.பட்டினம் வரையிலும் கடற்கரை பகுதியாகும். இப்பகுதி மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெருவது உள்ளிட்ட அனைத்து அரசு பணிக்கும் நீண்ட தூரம் உள்ள திருவாடானைக்கு செல்ல வேண்டியுள்ளது. இது இப்பகுதி மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்ப்படுத்தி வருகிறது. கடந்த வருடம் திருவாடானை தாலுகாவில் இருந்த ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை தனி தாலுகாவாக அறிவித்தது இப்பகுதி மக்களுக்கு பெரும் பயனாக உள்ளது. இதேபோல் தொண்டியை தனி தாலுகாவாக அறிவித்தால் இப்பகுதி மக்கள் பயன் அடைவார்கள். தமுமுக மாவட்ட செயலாளர் ஜிப்ரி கூறியது, எஸ்.பி.பட்டிணத்திலிருந்து திருவாடானை செல்ல வேண்டும் என்றால் தொண்டி வழியாக சுமார் 30 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதேபோல் முள்ளிமுனை எம்.ஆர்.பட்டினம் உள்ளிட்ட கடைகோடி கிராமங்களிலிருந்து அலுவல் பணியின் காரணமாக மக்கள் செல்வதில் கடும் சிரமப்படுகின்றனர். தற்போது பேரூராட்சியாக உள்ள தொண்டியை தனி தாலுவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: