காந்தல் சாலையில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்

ஊட்டி, ஜூன் 9: காந்தல், படகு இல்லம், தீட்டுக்கல் பகுதிக்கு செல்லும் மக்கள் பயணிகள் நலன் கருதி மத்திய பஸ் நிலையம் அருகே நிழற்குடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காந்தல் பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு நாள்தோறும் ஊட்டி நகருக்கு வந்துச் செல்கின்றனர். அதேபோல், தீட்டுக்கல் மற்றும் காந்தல் போன்ற பகுதிகளில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாள்தோறும் ஏராளமான மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். படகு இல்லம் செல்ல சுற்றுலா பயணிகளும் அதிகளவு வருகின்றனர். இவர்கள், பஸ்சிற்காக ரயில் நிலையம் நுழைவு வாயில் எதிரே உள்ள சாலையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இப்பகுதியில் நிழற்குடைகள் ஏதும் இல்லாத நிலையில், மழைக் காலத்தில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, ஊட்டி-காந்தல் சாலையில் மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: