தற்போது 31 ஏக்கரில் செயல்பட்டு வரும் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை 200 ஏக்கரில் விரிவுபடுத்த நடவடிக்கை

சேலம், ஜூன் 9:  சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை 200 ஏக்கருக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் சேலத்தில் முகாமிட்டு ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். இரண்டாம் நாளான நேற்று காலை, அக்குழுவின் தலைவர் டி.ஆர்.பி ராஜா எம்எல்ஏ தலைமையில் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் ஆய்வு நடத்தினர். பூங்கா முழுவதும் சுற்றிப் பார்த்த அவர்கள், அங்கு வளர்க்கப்பட்டு வரும் வனவிலங்குகள் குறித்தும், சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து அருகில் உள்ள கருங்காலி கிராமத்திற்கு சென்று அங்குள்ள பழங்குடியின மக்களை சந்தித்து பேசி, அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், சேலம் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்த குழுவினர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணியை பார்வையிட்டனர். அப்போது, விரைவில் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது குழு உறுப்பினர்களான எம்எல்ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அருள், அன்பழகன், ஈஸ்வரன், எழிலரசன், பாலசுப்ரமணியன், முகமது ஷா நவாஸ், ராஜகுமார், செல்லூர் ராஜூ மற்றும் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன், எம்எல்ஏ சதாசிவம், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், மாவட்ட வன அலுவலர் கவுதம், துணை மேயர் சாரதாதேவி, டிஆர்ஓ ஆலின் சுனேஜா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

பின்னர் சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பாலப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம். ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் கட்டமைப்பில் உள்ள சில மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. வரும் செப்டம்பரில் முடிக்க வேண்டிய இப்பணி, சற்று மெதுவாக நடந்து வருகிறது. இதனை துரிதப்படுத்தி, விரைவில் முழுமையாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செட்டிச்சாவடியில் உள்ள குப்பை கிடங்கு எரிந்து புகை வருவதை தடுக்க, நிரந்த தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா தற்போது 31 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. அங்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்த ₹8 கோடி நிதி வனத்துறையால் கோரப்பட்டுள்ளது. இதனை காட்டிலும், தேவைக்கேற்ப கூடுதலாக நிதி வழங்க பரிந்துரை செய்யப்படும். மேலும், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை 200 ஏக்கருக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் வண்டலூர் பூங்காவைப்போல, சேட்டிலைட் உயிரியியல் பூங்காவாகவும், குழந்தைகளை கவுரும் வகையிலும் மாற்றப்படும். ஏரிகள் தூர்வாரி புனரமைக்கப்படுவதுடன், நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். சேலம் அண்ணா பூங்காவில் ஒரு வாரத்திற்குள், அண்ணா நிலை நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது,’’ என்றார்.

கலெக்டருக்கு பாராட்டு

தமிழக சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவினர் தலைமையில் நேற்று 2வது நாளாக கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் குழுவின் தலைவர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், ‘‘தமிழக அரசு பொதுமக்களுக்காக பல்ேவறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சேலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிக்கும், அரசின் திட்டங்களை மாவட்ட கலெக்டர் கொண்டு சென்றுள்ளார். குறிப்பாக, நேற்று முன்தினம் வழங்கப்பட்ட மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து, ஒரேநாளில் 7 பேருக்கு கிணறுவெட்ட அனுமதி ஆணையை வழங்கியுள்ளார். இதேபோல், கருங்காலி கிராமத்தில் பழங்குடியினர் சாதிச்சான்று கோரிய மக்களின் வேண்டுகோளை ஏற்று, ஓரிரு மணிநேரத்திலேயே 7 பேருக்கு சாதிச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக, மாவட்ட கலெக்டரை இக்குழு பாராட்டி, வாழ்த்துகிறது,’’ என்றார்.

Related Stories: