கடம்பூர் மலைப்பகுதியில் தான் அமைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி பலி

சத்தியமங்கலம், ஜூ ன் 9:  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி பசுவனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (58). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான விளைநிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். காட்டு யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க தோட்டத்தைச் சுற்றிலும் மின்வேலி அமைத்துள்ளார். இரவு நேரங்களில் மட்டுமே மின் வேலியில் மின்சாரம் பாய்ச்சுவது வழக்கம்.  இந்நிலையில் நேற்று காலை தனது விவசாய தோட்டத்தில் மின்வேலியில் மின் இணைப்பைத் துண்டிக்க மறந்த விவசாயி கிருஷ்ணன் எதிர்பாராதவிதமாக தனது தோட்டத்தில் உள்ள மின்வேலியை தொட்டபோது அதில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசியதில் விவசாயி கிருஷ்ணன் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள பசுவனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கிருஷ்ணனை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த கடம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடம்பூர் மலைப்பகுதியில் தனது விவசாய நிலத்தில் வனவிலங்குகள் நுழையாமல் தடுக்க அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி விவசாயி கிருஷ்ணன்  பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: