மனைவியிடம் செயின் பறித்தவர்களை கைது செய்ய கோரி வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர் மீண்டும் எஸ்பியிடம் புகார்

திருச்சி, ஜூன் 9: மனைவியிடம் செயின் பறித்தவர்களை கைது செய்யக்கோரி வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர் மீண்டும் எஸ்பியிடம் நேற்று புகார் அளித்தார். திருச்சி பேரூர் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் நீலமேகம் (28). துணை ராணுவ வீரர். காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலைவாணி. கடந்த ஏப்ரல் 27ம் தேதி நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கலைவாணியின் கழுத்திலிருந்த எட்டரை பவுன் தாலி செயினை பறித்துச் சென்றுவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த கலைவாணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுபற்றி அறிந்த நீலமேகம் நாட்டின் பாதுகாப்புக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஊரில் இருக்கும் மனைவி, குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். உடனே அவரது தொலைபேசி எண்ணுக்கு டிஜிபி சைலேந்திரபாபு தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து ஜம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நகையும் மீட்கப்படவில்லை. இந்நிலையில் விடுமுறையில் ஊர் திரும்பிய நீலமேகம் நேற்று மனைவி, குழந்தைகளுடன் வந்து திருச்சி எஸ்பி அலுவலகத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மனு அளித்தார்.

Related Stories: