வறட்சி காலத்தில் வீரியமான முளைப்பிற்கு விதை நேர்த்தி முறைகள்

புதுக்கோட்டை, ஜூன் 9: வறட்சிக் காலத்தில் குறைவான நீர்ப் பாசனத்தில் விதை முளைப்பு வீரியமாக அமைவதற்கு விதை கடினப்படுத்துதல் என்ற விதை நேர்த்தி முறையைப் பின்பற்றலாம். விதை கடினப்படுத்துதல் என்பது கட்டுப்படுத்தப்பட்ட நீரேற்றம் மூலம் விதையை வறட்சியைத் தாங்கி வளரும் நிலைக்கு உட்படுத்துவதாகும். இதற்கு விதைகளைத் தேவையான நீர் அல்லது ரசாயனக் கரைசலில் ஒரு குறிப்பிட்ட கால அளவு ஊற வைக்க வேண்டும். பிறகு விதைகளை எடுத்து நிழலில் உலர்த்திப் பழைய ஈரப்பதத்திற்குத் திரும்பக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் விதை கடினப்படுத்துதல் தொழில்நுட்பம் வேறுபடுகின்றது. கம்பு, சோளம், பருத்தி, சூரியகாந்தி ஆகிய விதைகளை விதை நேர்த்தி செய்திட, 20 கிராம் பொட்டாசியம் குளோரைடு உப்பை ஒரு லிட்டர் நீரில் கரைத்து 2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசல் தயார் செய்ய வேண்டும். ஒரு கிலோ கம்பு அல்லது பருத்தி அல்லது சூரியகாந்தி விதைகளை 650 மி.லி. உப்புக் கரைசலில் 10 மணி நேரமும், ஒரு கிலோ சோள விதைகளை 16 மணி நேரமும் ஊறவைத்துப் பிறகு பழைய ஈரப்பதத்திற்கே திரும்பும் வரை காத்திருந்து பின் விதைக்க வேண்டும். கேழ்வரகு விதைகளை கடினப்படுத்திட, 2 கிராம் சோடியம் குளோரைடு உப்பை ஒரு லிட்டர் நீரில் கரைத்து 0.2 சதவீதம் சோடியம் குளோரைடு கரைசல் தயார் செய்ய வேண்டும். 1 கிலோ கேழ்வரகு விதைகளை 700 மி.லி உப்புக் கரைசலில் 6 மணி நேரம் ஊறவைத்து விதைகளைப் பழைய ஈரப்பதத்திற்கே திரும்பக் கொணர்ந்து பின் விதைக்க வேண்டும்.

நிலக்கடலை விதைகளை கடினப்படுத்திட, 5 கிராம் கால்சியம் குளோரைடு உப்பை ஒரு லிட்டர் நீரில் கரைத்து 0.5 சதவீதம் கால்சியம் குளோரைடு கரைசல் தயார் செய்ய வேண்டும். 1 கிலோ நிலக்கடலை விதைகளை 300 மி.லி உப்புக் கரைசலில் 4 மணி நேரம் ஊறவைத்து விதைகளைப் பழைய ஈரப்பதத்திற்கே திரும்பக் கொணர்ந்து பின் விதைக்க வேண்டும். துவரை மற்றும் உளுந்து விதைகளை கடினப்படுத்திட, 1 கிராம் துத்தநாக சல்பேட் உப்பை ஒரு லிட்டர் நீரில் கரைத்து 100 பிபிஎம் துத்தநாக சல்பேட் கரைசல் தயார் செய்ய வேண்டும். ஒரு கிலோ துவரை விதைகளை 300 மி.லி. உப்புக் கரைசலில் 4 மணி நேரம் ஊறவைத்தும், ஒரு கிலோ உளுந்து விதைகளை 350 மி.லி உப்புக் கரைசலில் 3 மணி நேரம் ஊறவைத்தும் விதைகளைப் பழைய ஈரப்பதத்திற்கே திரும்பக் கொணர்ந்து பின் விதைக்க வேண்டும்.

பாசிப்பயறு விதைகளை கடினப்படுத்திட, 1 கிராம் மாங்கனீசு சல்பேட் உப்பை ஒரு லிட்டர் நீரில் கரைத்து 100 பிபிஎம் மாங்கனீசு சல்பேட் கரைசல் தயார் செய்ய வேண்டும். ஒரு கிலோ பாசிப்பயறு விதைகளை 350 மி.லி உப்புக் கரைசலில் 3 மணி நேரம் ஊறவைத்து விதைகளைப் பழைய ஈரப்பதத்திற்கே திரும்பக் கொணர்ந்து பின் விதைக்க வேண்டும். எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், வறட்சியான காலத்தில் விதை முளைப்பு திறன் வீரியமாக இருப்பதற்கு விதைகளை கடினப்படுத்தி விதைகள் வறட்சியினை தாங்கிட விதை நேர்த்தி செய்து பயன்பெறுமாறு வேளாண்மை இணை இயக்குநர் ராம. சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Related Stories: