பார் நடத்தும் கும்பல் தாக்குவதாக புகார்

பெரம்பலூர், ஜூன் 9: அனுமதியில்லாமல் பார் நடத்தும் கும்பல் அடித்து உதைப்பதாக புகார் தந்தும் நடவடிக்கை இல்லாததால் தழுதாழையை சேர்ந்த இட்லி கடைக்காரர் மனைவி பிள்ளைகளோடு மண்ணெண்ணெய், பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க வந்ததால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே தழுதாழை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் இளையராஜா(42). இவரது மனைவி லதா(32), இவர்களுக்கு சிவமுகுந்தன்(13), ஹன்சிகா(10), நிஷாந்தினி(7) ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் இளையராஜா தனது மனைவி லதாவுடன் தழுதாழை டாஸ்மாக் கடை அருகே சொந்தமான இடத்தில் பெட்டிக்கடை வைத்து, இட்லி, பணியாரமும் சுட்டு விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று (8ம் தேதி) காலை 11.30 மணிக்கு மனைவி லதா மற்றும் 3 பிள்ளைகளுடன் கையில் ஒரு பாட்டிலில் பெட்ரோல், ஒரு பாட்டிலில் மண்ணெண்ணெய் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

அவரை கலெக்டர் அலுவலக போர்டிகோ முன்பு தடுத்து சோதித்த பாதுகாப்பு போலீசார் பெட்ரோல், மண்ணெ ண்னை பாட்டில்கள் வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசார் சுற்றி வளைத்து கொண்டுவந்த பெட்ரோல், மண்ணெண்ணெய் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது தழுதாழையில் டாஸ்மாக் கடையருகே 300 மீ. தொலைவில் எங்கள் நிலத்தில் பெட்டிக் கடையோடு, இட்லி, பணியாரம் சுட்டு விற்பனை செய்து வருகிறோம். அங்கு பார் நடத்தி வரும் சிலர் நீ, இங்கே இட்லிக் கடை நடத்தக்கூடாது என்று கூறி எங்களைத் தாக்கி கடையை அடித்து நொறுக்கி விட்டனர். தொடர்ந்து ஆபாசமாக பேசி தாக்க வருகின்றனர். இது குறித்து அரும்பாவூர் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி தற்கொலை செய்துகொள்ள வந்துள்ளோம் எனக் கூறினர். பின்னர் பாதுகாப்பு போலீசார், அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்து உடனே விசாரிக்க சொல்லி இளையராஜா குடும்பத்தாரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து 2 நாட்களாக மனுதாரர்கள் தீக்குளிக்க வந்த சம்பவங்களால் தொடர்ந்து பதட்டமாகவும் பரபரப்பாகவுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: