கலெக்டர் அறிவிப்பு பாலம் திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் சிறு, குறு தொழில் கூடம் அமைப்பது தொடர்பாக கலெக்டர் கள ஆய்வு

கரூர், ஜூன் 9: அரவக்குறிச்சி ஒன்றியத்தில் வேலை கொடுப்போர்-வேலை தேடுவோர் இணைக்கும் பாலம் திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் சிறு, குறு தொழில் கூடம் அமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கள ஆய்வு மேற்கொண்டர். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றிய பகுதிகளான தென்னிலை தெற்கு, கொளந்தாபாளையம், அரவக்குறிச்சி ஒன்றியம் ஆண்டிபட்டிக் கோட்டை ஊராட்சியில் வேலை கொடுப்போர்-வேலை தேடுவோர்களை இணைக்கும் பாலம் திட்டத்தின்கீழ் சிறு தொழிற்கூடம் அமைப்பது தொடர்பாக கலெக்டர் பிரபு சங்கர் களஆய்வு மேற்கொண்டு தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் மகளிர்கள் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டத்திற்கு வேலைக்கு சென்று வருவதை குறைக்கும் வகையில் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே பாலம் திட்டத்தின்கீழ் சிறு குறு தொழிற்கூடம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பெண்கள் கிராமப்புறங்களில் இருந்து வேலைக்கு வருபவர்களின் பணியை குறைக்கும் வகையில், அவர்கள் இருக்கும் இடத்திலேயே தொழிற்கூடம் அமைத்து, பயிற்சியளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவது திட்டத்தின் நோக்கமாகும்.

இதனால், கிராமப்புறத்தில் இருந்து வெளியே செல்லும் பெண்கள் போக்குவரத்து பயணங்களை தவிர்த்து, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது மட்டுமின்றி பொருளாதாரத்திலும் தங்களை உயர்த்திக் கொள்ள இந்த திட்டம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலில் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு தகுதியான பணிகள் கொடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து, க.பரமத்தி ஒன்றியம் தென்னிலை (தெற்கு) ஊராட்சி கொளந்தாபாளையம் ஊராட்சி, தையல் பயிற்சி பள்ளியில், தையல் செய்யப்பட்ட துணிகளை பார்வையிட்டு, அதை தயாரிப்பதற்கான வேலைகளை கேட்டறிந்தார். அரவக்குறிச்சி ஆண்டிபட்டிக் கோட்டையில் பழுதடைந்த மேல்நிலைப்பள்ளியை புதிதாக புனரமைக்கப்பட்டு புதிய தையல் தொழில் கூடம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, அஞ்சூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் செயல்படும் அங்கன்வாடி மையத்தில், ஊட்டச்சத்து உறுதிசெய் என்ற சிறப்பு மருத்துவ முகாமில் எடை குறைபாடு உள்ள குழந்தைகளின் வளர்ச்சி குறித்து பெற்றோர்களின் கண்காணிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, நீங்கள் பதிவிடும் பதிவேடுகளை பெற்றோர்களின் கவனத்துக்கு சென்றடையும் வகையில் இருக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வில், மகளிர் திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நாகலட்சுமி, இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் வெங்கடேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: