கிருஷ்ணகிரி அணைக்கு 815 கன அடியாக நீர்வரத்து உயர்வு

கிருஷ்ணகிரி, ஜூன் 8: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெப்ப சலனம் காரணமாக, கடந்த ஓரிரு நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால், கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு திறந்துவிடப்பட்டுள்ள 640 கனஅடி தண்ணீர், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 11 தடுப்பணைகளை கடந்து கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது. தற்போது தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகம் உள்ளதால் எண்ணேகொல்புதூர் தடுப்பணையில் ரசாயன நுரை பொங்க தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் மாதேப்பட்டி வழியாக கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 280 கனஅடியாக இருந்தது. இரவு பெய்த மழையால், அணைக்கு நீர்வரத்து 815 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில் 50.50 அடிக்கு தண்ணீர் உள்ளதால், அணையில் இருந்து 317 கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி தேன்கனிக்கோட்டையில் அதிகபட்சமாக 53 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதே போல் கிருஷ்ணகிரி 7.50 மிமீ., பெனுகொண்டாபுரம் 3.20 மிமீ., போச்சம்பள்ளி 2.20 மிமீ., சூளகிரி 2 மிமீ., பாரூர் 1.80 மிமீ., நெடுங்கல் 1.20 மிமீ., என மொத்தம் 70.70 மிமீ மழை பதிவாகியுள்ளது.

Related Stories: