கிருஷ்ணகிரி, ஜூன் 8: கிருஷ்ணகிரி அருகே கார் மோதியதில் வாலிபர் பலியானார். நண்பர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.மத்தியபிரதேச மாநிலம் இண்டூர் மாவட்டம் மவூ கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபிரகாஷ்(38). இவரது உறவினர் ஜெகதீஸ்யாதவ். இவர்கள், இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள கிரானைட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரப்பம் அருகே பேக்கரி கடை முன் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிவபிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெகதீஸ்யாதவ் படுகாயமடைந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் கந்திகுப்பம் போலீசார் சிவபிரகாசின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து படுகாயமடைந்த ஜெகதீஸ்யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.