திருச்சி ஆம்னி பஸ் நிலையத்தில் வியாபாரிகள் மறியல்: 24 பேர் கைது

திருச்சி, ஜூன் 8: திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் ஆம்னி தற்காலிக பஸ்நிலையம் இயங்கி வந்தது. இதை நடத்தி வந்த ஒப்பந்ததார் ஒருவர் 4 கடைகளை கட்டி அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு உள் வாடகைக்கு விட்டார். இந்நிலையில் ஆம்னி பஸ்நிலையம் குத்தகை காலம் முடிந்தது. இதனால் வேறொருவர் அந்த இடத்தை ரயில்வே நிர்வாகத்திடம் குத்தகைக்கு எடுத்தார். அதன் குத்தகை காலம் முடிந்ததால் ஆம்னி பஸ்நிலையம் மூடப்பட்டது. ஆனால் கடைகள் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில் ஒப்பந்ததாரர் ரயில்வே நிர்வாகத்திடம் தனது முன்வைப்புத்தொகையை கேட்டபோது, ஆம்னி பஸ்நிலையத்தில் உள்ள கடைகளை அகற்றி தரவேண்டும் என கூறியதாக தெரிகிறது. ஆனால் அந்த கடை உரிமையாளர்கள் இரண்டாவது ஒப்பந்ததாரரிடம் அட்வான்ஸ் தொகையை கேட்டு, அந்த கடையை காலிசெய்ய மறுத்துவந்துள்ளனர். இந்நிலையில் ஒப்பந்ததாரர் நேற்றிரவு 3 கடைகளை இடித்து அகற்றினார். இதனால் ஆத்திரமடைந்த கடை வியாபாரிகள் நேற்று காலை திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த கன்டோன்மென்ட் போலீசார் மறியலில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: