7வது மைல் பகுதியில் சாலையோரம் வளையும் மரங்களால் விபத்து அபாயம்

ஊட்டி:  ஊட்டியில் இருந்து சோலூர் செல்லும் சாலையில் ஏழாவது மைல் பகுதியில் சாலையோரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பைன் மரங்களால் விபத்து அபாயம் நீடிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சமூக காடுகள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளிலும் கற்பூரம், சீகை, பைன் மற்றும் சாம்பிராணி போன்ற மரக்கன்றுகளை வனத்துறையினர் நடவு செய்தனர். குறிப்பாக, வனங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள வெற்றி நிலங்கள் மற்றும் புல்வெளிகள் இருந்ததோ அங்கெல்லாம் இந்த மரக்கன்றுகளை நடவு செய்துவிட்டனர். தற்போது இவைகள் நெடுநெடுவென வளர்ந்து நிற்கின்றன. இந்த மரங்களால், ஆண்டு தோறும் பருவமழையின் போது பல்வேறு விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. குறிப்பாக, பருவமழை காலங்களில் இந்த மரங்கள் சாலைகளில் விழுந்து போக்குவரத்து பாதிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், ஊட்டியில் இருந்து ேசாலூர் செல்லும் சாலையில் ஏழாவது மைல் முதல் சொமர்டேல் எஸ்டேட் நுழைவு வாயில் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையோரங்களில் ஏராளமான பைன் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இவைகள் சாலையை ஒட்டியே நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மரங்கள் சாலையில் சாய்ந்து நிற்கின்றன. பருவமழையின் போது, காற்று அடித்தால், இந்த மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி, வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயமும் தொடர்கிறது.எனவே, பருவமழை துவங்கும் முன் ஏழாவது மைல் பகுதியில் சாலையில் தொங்கிக் கொண்டிருக்கும் பைன் மரங்களை அகற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: