9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தனியார் கம்பெனி ஊழியருக்கு 5 ஆண்டு சிறை

புதுச்சேரி, ஜூன் 7:   புதுச்சேரி வில்லியனூரில் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கம்பெனி ஊழியருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளது. புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தி (எ) வைத்திலிங்கம் (32). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் 9ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வசித்து வந்தார். அந்த சிறுமியிடம் வைத்திலிங்கம் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், செல்போனில் பேசியும் துன்புறுத்தி வந்துள்ளார். இச்சம்பவம் கடந்த 2020 பிப்ரவரி மாதம் நடந்தது. இதுபற்றி அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர், வில்லியனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அப்போதைய இன்ஸ்பெக்டர் பழனிவேல், எஸ்ஐ நந்தகுமார் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து வைத்திலிங்கத்தை கைது செய்தனர். இவ்வழக்கு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் (தலைமை நீதிமன்றம்) நடந்து வந்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி செல்வநாதன், குற்றவாளி வைத்திலிங்கத்திற்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பாலமுருகன் ஆஜரானார். 

Related Stories: