மூதாட்டி கொலை வழக்கில் 7 பேரிடம் விசாரணை

புதுச்சேரி, ஜூன் 7: புதுச்சேரி லாஸ்பேட்டை சாமிபிள்ளைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் மனைவி அஞ்சலை (80). இவரது கணவர், புருஷோத்தமன் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லை. இதனால் அஞ்சலை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகையை கொண்டு வாழ்க்கையை ஓட்டி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் லாஸ்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அஞ்சலை கழுத்து அறுத்து, கொலை செய்யப்பட்டு, அழுகிய நிலையில் கிடந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட அஞ்சலை அணிந்து இருந்த கம்மல், வளையல் ஆகியவை மாயமானதால், இந்த நகைக்காக அவரை மர்ம நபர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே அஞ்சலையின் வீடு அமைந்துள்ள பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை சேகரித்துள்ள போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். இதில் சந்தேகத்துக்குரிய 7 நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் இந்த சம்பவத்திற்கு தொடர்பில்லை என கூறி வருகின்றனர். இருந்தபோதும் அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் மற்றும் மூர்த்திக்குப்பத்தை சேர்ந்த வாலிபர் ஆகியோதிடம் துருவி துருவி விசாரித்து வருகின்றனர். 

Related Stories: