அரசின் திட்டங்களை பயன்படுத்தி இளைஞர்கள் முன்னேற வேண்டும்

குறிஞ்சிப்பாடி, ஜூன் 7:   தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்க பயிற்சி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில் குறித்த மண்டல அளவிலான விழிப்புணர்வு கூட்டம்  அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி சிறப்புரையாற்றினார். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் திட்ட விளக்க உரை நிகழ்த்தினார். காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலைய தலைவர் அனிஷா ராணி, விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் ராம் உள்ளிட்ட வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் அதிகாரிகள், திருவண்ணாமலை, விழுப்புரம், மங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் பிரதிநிதிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசுகையில், விவசாயத் தொழிலாளர்கள் தொழில் முனைவோராக ஏற்றம் பெற இந்தப் புத்தாக்க பயிற்சி வேளாண் துறை சார்பில் நடத்தப்படுகிறது. வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் முந்திரி, கொய்யா, மா, வாழை, நெல் என எந்த பொருளையும் நேரடியாக சந்தைப் படுத்துவதை விட, அதை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் கூடுதல் லாபம் பெறலாம். அரசின் திட்டங்களை பயன்படுத்தி இளைஞர்கள் முன்னேற வேண்டும் என்றார்.

Related Stories: