செட்டில்மென்ட் தொகையை உயர்த்தி தரக்கோரி தனியார் கம்பெனி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில், அமெரிக்காவை சேர்ந்த தனியார் கார் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது.  தற்போது கார் விற்பனை குறைய தொடங்கியநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் உற்பத்தியை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக இந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த இந்நிறுவன ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால், நிறுவனம் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து வருகிறது. இதனால், இந்நிறுவனத்தில் பணிபுரிந்த 6000 பேரும், மறைமுகமாக பணியாற்றிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. ஊழியர்களுக்கான செட்டில்மென்ட் பணம் முறையாக பணிக்கால அடிப்படையில் வழங்கப்படும் என கம்பெனி தரப்பில் உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை 30 முறைக்கும் மேல் நடைபெற்று தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில், கார் நிறுவன ஊழியர்கள் செட்டில்மென்ட் பணத்தை அதிகப்படுத்தி தரக்கோரி கடந்த ஒரு வாரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 8வது நாளாக இன்றும் தொடர்ந்து ஆண்கள், பெண்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிறுவனத்தின் உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: