மேய்ச்சலுக்கு சென்ற 15 ஆடுகள் பரிதாப சாவு

சாயல்குடி: சாயல்குடி அருகே எஸ்.கீரந்தையில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. விவசாயம் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். தற்போது கோடைக்காலம் என்பதால் ஆடுகள் கண்மாய் பகுதிக்கு மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பிய 5க்கும் மேற்பட்ட ஆடுகள் தண்ணீர் குடித்தவுடன் மயங்கி விழுந்து இறந்துள்ளது.தொடர்ந்து நேற்று 10 ஆடுகள் என மொத்தம் 15 ஆடுகள் இறந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் மேய்ச்சல் பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது கண்மாய் பகுதியில் 50 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் 50 இருப்பது தெரியவந்தது. அதிலிருந்து சிந்திய அரிசிகளை தின்ற ஆடுகள் இறந்தது குறித்து அதிர்ச்சியடைந்தனர்.இது குறித்து சாயல்குடி போலீசார் மற்றும் கடலாடி வருவாய்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மண்டல துணை தாசில்தார் சந்திரன், எஸ்.ஐ சாலமன் ஆகியோர் வந்து ஆய்வு செய்தனர். பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 மூட்டைகளை மீட்டு கடலாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசிகளை சேகரித்து பதுக்கி வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். பதுக்கல் அரிசியை தின்று இறந்த ஆடுகளின் உரிமையாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: