போச்சம்பள்ளி வாரச்சந்தையில் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனை

போச்சம்பள்ளி, ஜூன் 6: போச்சம்பள்ளியில் ஞாயிறு வாரச்சந்தை நேற்று கூடியது. இதில் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம் ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில், இந்த வாரம் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது. போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கிராம தேவதைகளுக்கு 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை திருவிழா நடந்து வருகிறது. இதில் பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கறி விருந்து வைப்பார்கள். இதேபோல், போச்சம்பள்ளி அருகில் உள்ள கோடிப்புதூர் கிராமத்தில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நடத்தப்படாத திருவிழா இந்த ஆண்டு நடைபெற உள்ளது.

இதில் வரும் 8ம் தேதி பரண் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதனால் சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. கடந்த வாரம் 10 கிலோ கொண்ட ஆடு ₹4 ஆயிரம் முதல் ₹4,500 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ₹5 ஆயிரம் முதல் ₹6 ஆயிரம் வரை விலை போனது. இதனால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் காய்கறி மற்றும் இதர பொருட்கள் விற்பனை மந்தமாக இருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சந்தைக்கு மக்கள் வரத்து குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: