திருடிய நகைகளை ஒப்படைத்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கொள்ளையன்

காலாப்பட்டு, ஜூன் 6: புதுச்சேரி அடுத்த கோட்டக்குப்பத்தில் திருடிய நகைகளை மீண்டும் கொண்டு வந்து உரியவர்களிடம் ஒப்படைத்து காலில் விழுந்து கொள்ளையன் மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட அமிர்தா கார்டன் பகுதியில் வசித்து வருபவர் லியாகத் அலி. இவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நசிமா (52), அவரது தாயார் மட்டும் வீட்டில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி நசிமாவும் அவரது தாயாரும் வீட்டை பூட்டிவிட்டு புதுச்சேரிக்கு சென்றனர். பின்னர், இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 23 பவுன் தங்க நகை, ரூ.8 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது.

இது குறித்து கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மோப்ப நாயுடன் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்நிலையில், போலீசார் தன்னை பிடித்து விடுவார்களே என அச்சமடைந்த கொள்ளையன், அந்த வீட்டிற்கு சென்று திருடிய நகை மற்றும் பணத்தை கொடுத்துவிட்டு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரியவரவே, அங்கு விரைந்து சென்று கொள்ளையனை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில், அந்த நபர் சின்ன கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (38) என்பது தெரியவந்தது. அவர் தனியாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டாரா? அல்லது வேறு யாரேனும் கூட்டாளிகள் உள்ளார்களா? என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கோட்டக்குப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: