அதிமுக கட்சி, கொடியை விரைவில் கைப்பற்றுவோம்

திண்டிவனம், ஜூன்   6:  திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தின் விசுவாசியாக இருந்த முகமதுஷெரீப், தற்போது விகே சசிகலா ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். நேற்று அவரது மகள் திருமணம் திண்டிவனம் சந்தைமேட்டில் நடந்தது. இதில் சசிகலா கலந்து கொண்டு பேசுகையில்,  அதிமுக மிகப்பெரிய ஆலமரம், இதில் எத்தனையோ கோடிக்கணக்கான பறவைகள் தஞ்சமடைந்து வந்துள்ளன. ஒரு சில பறவைகள் தன் வயிறு நிறைந்தால் போதும், என்று சுயநலத்துடன் இருக்கும். அதே சமயத்தில் வேறு சில பறவைகள், மற்றவர்களை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் ஆலமரத்தில் அடைந்த பலன்களை நன்றியோடு நினைத்து பார்க்கும். அதேபோல் உங்களை போன்ற உண்மையான தொண்டர்களை காப்பாற்றுவதற்கு என் எஞ்சியுள்ள வாழ்நாளை முழுவதுமாக அர்ப்பணிக்கிறேன். அம்மா என்று நாடகமாடிய ஒரு சில பொய் முகங்களுக்கு மத்தியில் உங்களை போன்ற உண்மையான தொண்டர்களுக்கு நம் இயக்கத்தில் சிறப்பான எதிர்காலம் உண்டு. புரட்சித் தலைவர் எந்தவிதமான சாதி, மத பேதமின்றி அனைவரின் பேராதரவோடு இந்த இயக்கத்தை உருவாக்கினார். ஜெயலலிதாவும் அதே வழியைதான் பின்பற்றினார். தற்போது நானும் இதே வழியில்தான் பயணித்து கொண்டிருக்கிறேன். அதிமுகதான் உண்மையான மக்கள் இயக்கம். இது தொண்டர்களால் உருவானது. யாரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாது.  வேறுபாடின்றி தொண்டர்களை அரவணைத்து சென்றால்தான் இந்த இயக்கம் மீண்டும் புதுப்பொலிவுபெறும். கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அதிமுக கட்சி, கொடியை விரைவில் கைப்பற்றுவோம், என்றார்.

Related Stories: