பணிகள் முடிவடைந்தது அப்டா - காவல்கிணறு 4 வழிச்சாலை திறக்கப்படுவது எப்போது?

நாகர்கோவில்,  ஜூன் 4:  நாகர்கோவில் காவல்கிணறு இடையே 4 வழிச்சாலைகள் பணிகள் முடிவடைந்த  பின்னரும் திறக்கப்படாமல் உள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நாகர்கோவில்-காவல்கிணறு, நாகர்கோவில் - கன்னியாகுமரி, நாகர்கோவில்-காரோடு வழியாக  திருவனந்தபுரம் 4 வழிச்சாலை பணிகள் கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது, பலத்த  போராட்டத்திற்கு இடையே தொடங்கப்பட்டது. இதில் நாகர்கோவில் காவல்கிணறு-  பெருங்குடி இடையே 4 வழிச்சாலை பணிகள் முற்றிலும் முடிவடைந்து பல மாதங்கள்  ஆகின்றன.

தற்போது இந்த சாலையில் கான்கிரீட் பலகைகள் மூலம்  மூடப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் இதனை அகற்றி விட்டு, பயணித்து  வருகின்றனர். நாகர்கோவிலில் இருந்து 10 நிமிடத்தில் சென்று விடலாம்  என்பதால், மக்கள் இந்த சாலையை மிகவும் விரும்பி பயணித்து வருகின்றனர். எனினும்  சாலை அதிகார பூர்வமாக திறக்கப்படாததால், ஆங்காங்கே சாலையில் தடுப்புகள்  நகாய் அதிகாரிகளால் வைக்கப்பட்டுள்ளன. இதனால், டிராக் மாறி மாறி பயணித்து  வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாகவே இந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்கு  விரைவில் வரும் என அதிகாரிகள் கூறினாலும், இரு பாலப்பணிகள் காரணமாக  கிடப்பில் கிடந்தது.

ஆனால், தற்போது இரு பாலப்பணிகள்  முடிவடைந்து, இருபுறமும் ரம்மியமான காட்சிகளுடன், இந்த அதிவிரைவு சாலை  காணப்படுகிறது. ஆனாலும், சாலையை திறக்காமல் உள்ளனர். இதற்கு, அரசியல்  ரீதியிலான தடையே காரணம் எனவும் கூறப்படுகிறது. இதுபற்றி நகாய்  அதிகாரிகளிடம் கேட்டபோது, பணிகள் முற்றிலும் முடிவடைந்து விட்டன. ஆனால்,  இதற்கு இந்திய அரசின் கெசட்டில், நோட்டிபிகேசன் செய்ய வேண்டும். அதன்பின்னர்  தான், சாலை பழுதுபார்ப்பு ஏஜென்சி தேர்வு செய்ய முடியும். இந்த தேர்வு  முடிந்த பின்னரே சாலையை அதிகாரபூர்வமாக திறக்க முடியும்.

ஆனால்,  மக்கள் இந்த சாலையில் தடுப்புகளை அகற்றிவிட்டு பயணிக்கின்றனர். இதனால்,  திறக்கப்படாத சாலையில் விபத்து ஏற்பட்டால், பிரசினைகள்  ஏற்படும். எனவே பொதுமக்கள் தடைகளை அகற்றி பயணம் செய்ய வேண்டாம் எனக்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: