தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் ₹4.07 கோடியில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு

நாகர்கோவில், ஜூன் 4: குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் சார்பில், தக்கலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

குமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேயன்குழி பகுதியில் ₹10 லட்சம் மதிப்பில் தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் நூலகத்தின் முதல் தளத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதக் கோப்பை மற்றும் தட்டு உற்பத்தி மையத்திற்கான கட்டிட பணியினை நேரில் பார்வையிட்டு, கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து கேட்டறிந்ததோடு விரைந்து பணிகளை முடித்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நுள்ளிவிளை ஊராட்சி பகுதியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் வீடு கட்டும் பணியினையும் ஆய்வு மேற்கொண்டு கட்டிட பணியினை விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, ₹23.57 லட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நுள்ளிவிளை ஊராட்சியில் புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டும் பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

₹42.50 லட்சம் மதிப்பில் முதலக்குறிச்சியில் வாழை சிப்ஸ் பிரிவுக்கான கட்டிட பணியினையும், ₹20 லட்சம் மதிப்பில் வாழை மாவு அலகுக்கான கட்டிட பணியினையும், ₹13.95 லட்சம் மதிப்பில் முத்தலக்குறிச்சியில் தேன் மற்றும் பழச்சாறுக்கான கட்டிட கட்டுமான பணி என மொத்தம் ₹4.07 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அத்துடன ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளையும், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) தனபதி, செயற்பொறியாளர் ஏழிசை செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: