தொழுதூரில் பரபரப்பு சென்னையில் இருந்து சரக்கு வாகனத்தை கடத்தி வந்த வாலிபர்

தொழுதூர், ஜூன் 3:  கடலூர் மாவட்டம் தொழுதூர் அடுத்த ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பணியில் நேற்று இருந்த போது கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் வந்தது. அதில் சென்னை போரூரில் இருந்து சரக்கு வாகனத்தில் பர்னிச்சர் மற்றும் லாக்கர் பொருட்களுடன் ஒருவர் கடத்திவருவதாக வந்த தகவலின் படி போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டி கூட்ரோட்டில் வந்த சம்பந்தப்பட்ட வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், அதன் டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். இதையடுத்து, 15 கிலோ மீட்டர் தூரம் சினிமா பட பாணியில் துரத்தி சென்று தொழுதூர் வெள்ளாற்று பாலம் அருகே வாகனத்தை போலீசார் மடக்கி பிடித்தனர்.

வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கரிமச்சம்பட்டியை சேர்ந்த கணேசன் மகன் மணிகண்டன் (32) என்பதும், இவர் போரூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் மதுபோதையில் இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கம்பெனி முன்பு நிறுத்தி வைத்திருந்த சரக்கு வாகனத்தை கடத்தி சொந்த ஊருக்கு செல்லும் போது போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும், விசாரணையில் வரும் வழியில் 20 கிலோ மீட்டர் வந்த பிறகு வண்டிக்கு டீசல் இல்லாமல் நின்று விட வாகனத்தில் இருந்த பர்னிச்சர் பொருட்களை 400 ரூபாய்கு விற்பனை செய்து விட்டு டீசல் போட்டு வந்துள்ளார். மீண்டும் வண்டி சிறிது தூரம் வந்து டீசல் இல்லாமல் நின்றுவிட்டது. பிறகு வண்டியில் இருந்த அலுமினியம் பைப்புகளை விற்பனை செய்து 1500 ரூபாய்கு டீசல் போட்டு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும் கம்பெனியில் சரியான முறையில் சம்பளம் வழங்காததால் சரக்கு வாகனத்தை கடத்தியதாக தெரிவித்துள்ளார். மணிகண்டனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: