கிடப்பில் போடப்பட்ட பரவனாறு பாலம் கட்டுமான பணி

சேத்தியாத்தோப்பு, மே 31: சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரைமேடு பகுதியில் சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பரவனாறு அமைந்துள்ளது. இந்த பாலம் மிகவும் பழமையான பாலம் என்பதால் சிதிலமடைந்து பக்க வாட்டு சுவர் இடிந்து விழுந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த பாலத்தையொட்டி தான் நகாய் திட்டத்தில் புதிய பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த ஓராண்டிற்கும் மேலாக கட்டுமான பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பல மாவட்டங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பழைய பாலம் முழுவதும் சேதமாகி இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இந்த பாலத்தின் வழியே சென்னை - கும்பகோணம் பேருந்துகளும், சேலம்-சிதம்பரம், பாண்டிச்சேரி -கடலூர் செல்லும் பேருந்துகளும் சென்று வருகின்றன. மேலும் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்களும் அதிகளவில் சென்று வருகின்றன. எனவே வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பு புதிய பாலத்தின் கட்டுமான பணிகளை துரிதபடுத்தி முடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: