கஞ்சா கடத்தலை தடுக்க நாகர்கோவில் வந்த ரயில்களில் அதிரடி சோதனை

நாகர்கோவில், மே 31: தமிழகத்தில் கஞ்சா, போதை பொருள் கடத்தலை தடுக்கும் வகையில், காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து ரயில்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ரயில்களிலும் சோதனை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில் நாகர்கோவிலிலும் அவ்வப்போது ரயில்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி நேற்று முன் தினம் திடீரென நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு வந்த ரயில்கள் மற்றும் புறப்பட்டு சென்ற ரயில்களில் அதிரடி சோதனை நடந்தது. கோவை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வந்த ரயில்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் போதைப்பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. சந்தேகத்துக்கு இடமான வகையில் நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: