மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வரும் வனவிலங்குகளால் விவசாயிகள் உயிருக்கு அச்சுறுத்தல் வனத்துறை மீது புகார்

நெல்லை, மே 28: மேற்குத்  தொடர்ச்சி மலைப் பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசத்தால் விவசாயிகள் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது  பாதுகாப்பு இல்லை, வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி புகார்  தெரிவித்தனர். நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்தது.  மாவட்ட வருவாய் அலுவலர்  பெருமாள், வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன், கலெக்டரின் நேர்முக  உதவியாளர் (வேளாண்மை) சுப்பையா ஆகியோர் மு்ன்னிலை  வகித்தனர்.

கூட்டம்  தொடங்கியதும், விவசாயிகள் பேசுகையில், ‘‘வாழை பயிர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை கட்டினோம். பலத்த காற்றினால் கடந்த 2018ம் ஆண்டு வாழைகள் சேதம் அடைந்த நிலையில் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. காப்பீட்டு தொகை செலுத்தியும் ஏன்  நிவாரணம் வழங்க முடியாது என்றனர்.

இதற்கு பதிலளித்த தோட்டக்கலை  துணை இயக்குநர் பாலகிருஷ்ணன், காற்றினால் சேதம் அடைந்த வாழைகளுக்கு  இழப்பீடு தொகை வழங்க சாத்தியம் இல்லை. அதற்கான விதிமுறைகள் இல்லை.’’  என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பெரும்படையான்  பேசுகையில், ‘‘ மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுப்பன்றி, மிளா  ஆகியவை அட்டகாசம் செய்து வந்த நிலையில், தற்போது கரடி புகுந்து விட்டது. 38  வயது விவசாயி ஒருவரை கரடிகள் கடித்துக் குதறியதில் 19 தையல்கள்  போடப்பட்டுள்ளன. அவர் அரசு மருத்துவமனையிலும்,  தனியார் மருத்துவமனையிலும்  சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

இதனால்  விவசாயிகள் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது, அச்சுறுத்தலாக உள்ளது.  இதுகுளித்து வனத்துறையினர் எந்த  நடவடிக்கையும் எடுப்பதில்லை. வனப்பகுதியை ஒட்டியுள்ள 15 கிமீ தூரத்திற்கு  பயிர் செய்யாதீர்கள் என விவசாயிகளை வனத்துறையினர் விரட்டுகின்றனர். கேரளா, தெலங்கானாவில்  பன்றிகள், வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று   தமிழகத்திலும் பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.’’ என்றார். கூட்டத்தில் நெல்லை மண்டல கூட்டுறவு  சங்கங்களின் இணைப் பதிவாளர் அழகிரி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை  இயக்குநர் சுபாஷினி, பொதுப்பணித்துறை தாமிரபரணி கோட்ட செயற்பொறியாளர்  மாரியப்பன், வேளாண்மை துணை இயக்குநர்கள் பாலசுப்பிரமணியன், ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளிடம் மின் இணைப்புக்கு ‘லஞ்சம்’

கூட்டத்தில் பேசிய உவரி விவசாயி ராஜன், திசையன்விளையில் நகர்ப்புறம், ஊரகத்திற்கு ஒரே ஒரு உதவி பொறியாளர் தான் இருக்கிறார். தனித்தனி பொறியாளர் நியமிக்க வேண்டும். தட்கல் திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற ரூ.2.50 லட்சம் முன் பணம் செலுத்த வேண்டியுள்ளது. விவசாயிகள் தாலியை விற்று பணத்தை தயார் செய்தாலும் மின் இணைப்பு விண்ணப்பத்தை பெறுவதற்கே ரூ.25 ஆயிரம், 50 ஆயிரம் லஞ்சம் கேட்கின்றனர் என கலெக்டரிடம் புகார் தெரிவித்தார். அதற்கு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் தெரிவியுங்கள் என கலெக்டர் விஷ்ணு கேட்டுக் கொண்டார்.

Related Stories: