முக்கொம்பு வந்த காவிரி நீரை மலர், நெல், தானியங்கள் தூவி வணங்கி வரவேற்ற விவசாயிகள்

முசிறி, மே 28: காவிரி டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக கடந்த 24ம் தேதி மேட்டூரிலிருந்து காவிரி தண்ணீரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்தார். இந்த காவிரி தண்ணீர் நேற்று முன்தினம் மாயனூர் கதவணைக்கு வந்து சேர்ந்தது. அதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் வந்த தண்ணீர் நேற்று முக்கொம்பு வந்தடைந்தது.

மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் திருச்சி முக்கொம்பு வந்ததை கண்ட விவசாயிகள் காவிரி நீரை மலர்தூவி வணங்கினர். முன்னதாக ஆற்றின் பாலத்தில் படையல் போட்டு தேங்காய் உடைத்து, பழம், நெல் சோளம், தானியங்கள், விதைகள் ஆகியவற்றை படைத்தனர். பின்னர் நெல் விதைகள், தானியங்கள், மலர்கள் ஆகியவற்றை காவிரி ஆற்றில் தூவி வணங்கினர்.

முதலில் 3 ஆயிரம் கன அடி அளவில் வந்த தண்ணீர் நேரம் ஆக அதிகரித்தது. இதையடுத்து முக்கொம்பு அணை திறக்கப்பட்டது. காவிரியில் 41 மதகுகளும் திறக்கப்பட்டு அதன் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

Related Stories: