திண்டிவனம் அருகே பரபரப்பு அங்கன்வாடியில் பல்லி விழுந்த சத்துமாவு கஞ்சி சாப்பிட்ட 13 குழந்தைகள் உள்பட 29 பேர் பாதிப்பு

திண்டிவனம், மே 28: திண்டிவனம் அருகே அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த சத்துமாவு கஞ்சி சாப்பிட்ட 13 குழந்தைகள் உள்பட 29 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திண்டிவனம் அடுத்த நெய்குப்பி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் அங்கன்வாடி பொறுப்பாளராக அம்மன்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பாரதி(32) என்பவரும், சமையலராக உதயகலா(45) என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை அங்கன்வாடியில் சிறப்பு ஊட்டச்சத்து முகாம் நடைபெற்றது. இதில் சத்துமாவு கஞ்சி குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது ஏழுமலை மகன் கோகுல்(3) கஞ்சி குடித்தபோது பல்லியின் உடல் பகுதி இருந்ததை பார்த்து வாந்தி எடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதால் அப்பகுதி கிராம மக்கள் அங்கு திரண்டனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லி விழுந்த சத்துமாவு கஞ்சி சாப்பிட்ட 13 குழந்தைகள், 16 பெரியவர்கள் உட்பட 29 பேரை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களை சார் ஆட்சியர் அமித் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மருத்துவரிடம் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மயிலம் எம்எல்ஏ சிவக்குமார், வட்டாட்சியர் வசந்த கிருஷ்ணன், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணை சேர்மன் ராஜாராம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளிமேடுபேட்டை போலீசார் அங்கன்வாடி பொறுப்பாளர் மற்றும் சமையலரிடம் விசாரணை செய்தனர். இந்நிலையில் அமைச்சர் மஸ்தான் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஊட்டச்சத்து முகாமில் சத்துமாவு கஞ்சியில் பல்லி விழுந்த கஞ்சியை சாப்பிட்டு சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட 29 பேர் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: