விழுப்புரம் அருகே தொடர் கைவரிசை தலைமை ஆசிரியர், அதிகாரியின் டிரைவர் வீட்டில் 15 பவுன் நகை, பணம் கொள்ளை

விழுப்புரம், மே 28: விழுப்புரம் அருகே தலைமை ஆசிரியர், திட்ட இயக்குரின் டிரைவர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் வண்டிமேடு விராட்டிக்குப்பம் பாதையை சேர்ந்தவர் சுகுந்தகுமார். இவர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரின் டிரைவராக பணியாற்றி வருகிறார். இதனிடையே, நன்னாட்டில் சொந்தமாக வீடு கட்டியுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டை பூட்டிக்கொண்டு சென்றுள்ளார். இதனிடையே, நேற்று வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் ெகாள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி. அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மகனை பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். நேற்று வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு 10 பவுன் நகை, ஒரு ஸ்கூட்டர் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், அருகில் உள்ள ராஜ்மோகன் என்பவர் வீட்டிலும் சென்ற கொள்ளையர்கள் பொருட்கள் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டில் சோதனையிட்டு அங்கும், இங்குமாக ஓடியது. திருடுபோன மொத்த மதிப்பு ரூ.3.50 லட்சம் ஆகும்.

Related Stories: