பொது விநியோக திட்டத்தை ஒரே துறையின்கீழ் கொண்டு வரவேண்டும்

கடலூர், மே 28: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், பொது விநியோக திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி கடத்தப்பட்டு வருவது தற்போது அதிகரித்துள்ளது. ரேஷன் கடைகளில் முன்னுரிமை அட்டை, முன்னுரிமையற்ற அட்டை, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கு அன்னயோஜனா அட்டை உள்ளிட்ட பல்வேறு வகையான 2.10 கோடி ரேஷன் அட்டைகள் நடைமுறையில் உள்ளது.

இதில் முன்னுரிமை அட்டை, முன்னுரிமையற்ற அட்டைகளை வைத்திருப்போர் பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களை பயன்படுத்துவது இல்லை. எனவே, குடும்ப அட்டைதாரர்களின் தேவையை முன்னரே கேட்டு தெரிந்து கொண்டு அந்த பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும். இதன் மூலமாக 10 சதவீதம் கடத்தலை தடுக்க முடியும். கிடங்குகளை மாலை நேரங்களில் சோதனையிட்டாலே பெரும் முறைகேட்டை தடுக்கலாம்.3 துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது விநியோகத் திட்டத்தை ஒரே துறையின் கீழ் அரசு கொண்டு வர வேண்டும். இதன் மூலமாக பணியாளர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும், கடத்தலை கட்டுப்படுத்த முடியும், என்றார்.சங்க பொருளாளர் சரவணன், தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா, மாவட்ட தலைவர் அல்லிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: