மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம்

கடலூர், மே 28: கடலூர் அருகே மதலப்பட்டு ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மதலபட்டு ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டிச்சாவடி கிராமத்தில் சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பழுதான நிலையில் உடனடியாக அதனை மாற்றி அமைக்க வேண்டும். தடையில்லாமல் குடிநீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. நீர்த்தேக்க தொட்டியில் பல இடங்களிலிருந்தும் நீர் கசிவு ஏற்பட்டு வருவதால் எந்த நேரமும் இடிந்து விடலாம் என்ற அபாயத்தில் உள்ளது. மேலும் தலைக்கு மேல் ஆபத்து என்ற நிலைப்பாட்டுடன் வாழ்ந்து வரும் இப்பகுதி மக்கள் குடிநீர் முறையாக விநியோகிக்க படாததால் அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்று குடிநீர் பிடித்து வரும் அவல நிலையில் உள்ளனர். எனவே போர்க்கால அடிப்படையில் குடிநீர் வினியோகத்தை சீரமைக்கவும், பழுதான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: