திருத்தணி முருகன் கோயில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருத்தணி, மே 28:  திருத்தணி முருகன் கோயிலில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முருகனை தரிசிக்க கடந்த செவ்வாய்க்கிழமை உள்ளூர் பக்தர்கள் சென்றனர். அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிர்வாகம் சிறப்பு வழி தரிசனம் முன்னறிவிப்பின்றி ரத்து செய்தது. இதனால் பக்தர்கள், கோயில் பணியாளர்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திருத்தணி அடுத்த வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் லோகநாதன் ரூ.100 ரூபாய் சிறப்பு வழியில் தரிசனம் செய்ய முயன்றார், பணியில் இருந்த கோயில் ஊழியர் புருஷோத்தமன், டிக்கெட் வாங்காமல் அனுமதிக்க முடியாது என்றார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. லோகநாதன், கோயில் ஊழியர் புருஷோத்தமனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிகழ்வு அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து இரு தரப்பினரும் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில்  திருத்தணி - சித்தூர் சாலையில் ஆவின் சேர்மன் வேலஞ்சேரி சந்திரன், ஆர்.கே.பேட்டை ஒன்றிய செயலாளர் குமார், மார்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஜெயசேகர்பாபு ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவினர் கோயில் ஊழியர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகவலறிந்த திருத்தணி (பொ) டிஎஸ்பி.அனுமந்தன், இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் விரைந்துவந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேற்படி சம்பவத்தில் அதிமுக பிரமுகர் மீது மட்டும் ஒருதலைபட்சமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக கோயில் ஊழியர்கள் மீது வழக்குபதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை வேலஞ்சேரி லோகநாதனை தாக்கிய வழக்கில் கோயில் ஊழியர்கள் லோகநாதன் மற்றும் புருஷோத்தமன், கார்த்திக் அசோக், ஜெயகிருஷ்ணா, தணிகாசலம் ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் கோயில் ஊழியர்கள் நேற்று திருத்தணி முருகன் கோயில் துணை ஆணையர் விஜயாவை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

அப்போது கோயிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் வருகின்ற செவ்வாய்க்கிழமை உள்ளிட்ட முக்கிய நாட்களில் தங்கள் யாரும் சிறப்பு கட்டண தரிசனங்கள் வழியில் பணியில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் மீது வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தங்களுக்கும் கோயில் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை இந்து அறநிலை துறை  எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

Related Stories: