தந்தையை கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த மகன் சுற்றிவளைத்து கைது

ஸ்ரீபெரும்புதூர்: மொட்டை மாடியில் தூங்கிய தந்தையை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மகனை, போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர், பாரதி நகர், ரெட்டி தெருவை சேர்ந்தவர் ராமு (45). இவரது மனைவி ரேணுகா (40). இவர்களுக்கு தினேஷ் (20) என்ற மகனும், 15 வயதில் மகளும் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான தினேஷ், வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன் ராமு, மகனை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்பதற்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்தார்.

அங்கு  சிகிச்சை பெற்ற அவரை, மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தார். மீண்டும் மது மற்றும் கஞ்சாவுக்கும் அடிமையான தினேஷ், அடிக்கடி பெற்றோரிடம் தகராறு செய்தார். இதை தொடர்ந்து கடந்த 25ம் தேதி இரவு ராமு, மாடியில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற தினேஷ், மறைத்த வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தினேஷ் தப்பிவிட்டார். புகாரின்படி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தினேஷை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையம் அருகே தினேஷ் சுற்றி திரிந்தார். இதை பார்த்த போலீசார், அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், கஞ்சா மற்றும் குடி பழக்கத்துக்கு அடிமையானதால், குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் தந்தை ராமு, தினமும் தினேஷை மற்றவர்கள் முன்னிலையில் திட்டி அவமானப்படுத்தியுள்ளார். இதனால் ஆ்த்திரமடைந்த அவர், தூங்கிக் கொண்டிருந்தபோது தந்தையை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்ததாக தினேஷ் வாக்குமூலம் அளித்தார் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: