ஏழைகளுக்கு வழங்கப்பட்ட இலவச நிலம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பயனாளிகள் குவிந்ததால் பரபரப்பு: போலீசார் குவிப்பு

தாராபுரம்,மே27: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சித்தராவுத்தன் பாளையம் கவுண்டச்சி புதூர் ஊராட்சியில் வசிக்கும் பழனியம்மாள், பத்மாவதி, நாகன், வேதமுத்து, பழனியப்பன், மாரியம்மாள், செல்வராஜ் ஆகிய 7 பேருக்கு கடந்த 1981ம் ஆண்டு தமிழக அரசு நில உச்சவரம்பு சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் தலா 1 ஏக்கர் 49 சென்ட் வீதம் 10 ஏக்கர் 41 சென்ட் நிலம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. 20 ஆண்டுக்குப் பின் இருவர் நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்தனர். மற்ற 5 பேர் நிலத்தை வைத்து இருந்தனர்.இந்நிலையில் அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து மனைகளாக பிரித்ததோடு குடிசை போட்டு சிலர் விற்க முயன்றதாக புகார் எழுந்தது.

இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரகுபதி தலைமையில் நிலத்திற்குரிய பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் புகுந்து அங்கிருந்த குடிசைகளை பிரித்து வீசினர்.

தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது. தகவலறிந்த தாராபுரம் டிஎஸ்பி தன்ராஜ், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டதோடு, இரு தரப்பினரும் மாவட்ட வருவாய் ஆய்வாளரிடம் நேரில் சென்று பிரச்னைக்கு தீர்வு காண அறிவுறுத்தினர். அதுவரை எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என அனைவரையும் வெளியேற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: