தொட்டபெட்டாவில் சாய்ந்து தொங்கும் மரங்களால் விபத்து அபாயம்

ஊட்டி, மே 27:நீலகிரி மாவட்டத்தில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்காக உட்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில், தொட்டபெட்டா சிகரம் சிறப்பு வாய்ந்த ஒன்று. கிழக்கு தொடர் மலைகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் இடமே இந்த தொட்டபெட்டா. இந்தியாவில் உள்ள உயர்ந்த சிகரங்களில் இதுவும் ஒன்று. இதனை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும், இங்கு அமைக்கப்பட்ட பைனாகுலர் மூலம் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள இயற்கை அழகை மட்டுமின்றி, கர்நாடக மாநில வனங்களையும் காண முடியும். இதற்காகவே, இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தொட்டபெட்டா காட்சி முனை நீலகிரி வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இச்சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள ராட்சத கற்பூர மரங்கள் மற்றும் சீகை மரங்கள் சாலையின் குறுக்கே சாய்ந்து தொங்குகின்றன. இதனால், இச்சாலையில் வெயில் படுவதே இல்லை. எந்நேரமும் நிழல் படுவதாலும், மழைக்காலங்களில் மரங்களில் உள்ள தண்ணீர் சாலையில் விழுந்துக் கொண்டே இருப்பதாலும் சாலை பழுதடைகிறது. மேலும், மழைக்காலங்களில் சாலையோரங்களில் உள்ள மரங்கள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியும், சாலை பழுதடையாமல் தடுக்கவும் இச்சாலையின் இரு புறமும் சாய்ந்து தொங்கும் மரக்கிளை மற்றும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: