காபி அவுஸ் பகுதியில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பாதிப்பு

ஊட்டி, மே 27: ஊட்டி காபிஅவுஸ் பகுதியில் சாலையில் இடையூறாக வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகின்றன. சுற்றுலா நகரமாக விளங்கும் ஊட்டி நகரின் முக்கிய சாலையாக கமர்சியல் சாலை விளங்கி வருகிறது. இச்சாலையின் இருபுறமும் சாக்லேட், வர்க்கி, டீ தூள் விற்பனை செய்ய கூடிய கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இதனால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை பார்வையிட்ட பின் உணவு சாப்பிடுவதற்காகவும், சாக்லேட், வர்க்கி, டீ தூள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்வதற்காகவும் கமர்சியல் சாலையில் உலா வருவது வழக்கம். இதனால், இச்சாலை மட்டுமின்றி இங்குள்ள வணிக நிறுவனங்களும் களைகட்டி காணப்படும்.

இச்சாலையில் காபிஅவுஸ் சதுக்கம் உள்ளது. இப்பகுதியில் அரசியல் கட்சி தலைவர் நினைவு தினம், பிறந்த தினங்களில் அவர்களின் படங்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். இதனால், இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், மார்க்கெட் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ஏடிசி செல்ல இப்பகுதி வழியாகவே செல்ல முடியும். இந்நிலையில் சமீபகாலமாக காபிஅவுஸ் பகுதியில் சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தி சென்று விடுகின்றனர். இதனால், மார்க்கெட் பகுதியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் திரும்புவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், இப்பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, காபிஅவுஸ் பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: